

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் சல்மான் கானின் வாராந்திர சம்பளம் ரூ.5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சிவணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியில் நடிகர் சல்மான் கான், தமிழில் நடிகர் கமல்ஹாசன், மலையாளத்தில் நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் சல்மான் கான், ஆரம்பத்தில் வாராந்திர சம்பளமாக ரூ.5 கோடி பெற்றதாகவும், தற்போது அவரது சம்பளம் ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ‘லெட்ஸ் ஒடிடி க்ளோபல்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.