நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படம் - சமீரா ரெட்டி விளக்கம்

நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படம் - சமீரா ரெட்டி விளக்கம்
Updated on
1 min read

நரைத்த முடியுடன் தான் இருக்கும் புகைப்படம் குறித்த நெட்டிசன்களின் கிண்டல்களுக்கு நடிகை சமீரா ரெட்டி பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகை சமீரா ரெட்டி. தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி தொடர்ந்து சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீரா ரெட்டி மேக்கப் எதுவும் இல்லாமல் நரைத்த தலைமுடியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பதிவில் சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது:

‘நான் ஏன் என் தலைமுடியை மறைப்பதில்லை என்று என் அப்பா என்னிடம் கேட்டார். மக்கள் என்னை கிண்டலடிப்பது குறித்து அவர் கவலை கொண்டிருந்தார். அவர்கள் அப்படி செய்வதால் நான் வயதான, அழகில்லாத, அலங்காரம் செய்யாத பெண்ணாக ஆகிவிடுவேன் என்று அர்த்தமா என்று கேட்டேன். மேலும் முன்பு போல நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை என்றும் கூறினேன்.

வழக்கமாக பிறர் என்னுடைய நரைமுடியை பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நான் தலைமுடிக்கு கருப்பு நிறம் பூசி வந்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் விரும்பினால் மட்டுமே பூசுகிறேன். பழைய நடைமுறைகளை உடைக்கும்போதுதான் புதிய மாற்றங்கள் தொடங்குகின்றன. என் தந்தை என்னை புரிந்து கொண்டார். ஒரு தகப்பனாக அவருடைய கவலைகளை நானும் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளும் சின்னச் சின்ன மாற்றங்களின் வழியாக நாம் முன்னோக்கிச் சென்று பலவற்றை கற்றுக் கொள்கிறோம். அவை சிறிய அடிகளாக இருந்தாலும் அவை நம்மை மிகப்பெரிய இடங்களுக்கு கொண்டு செல்லும்’

இவ்வாறு சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in