இரண்டு தடுப்பூசிகள் போட்ட பிறகு கரோனா பாதிப்பு: ஃபாரா கான் பகிர்வு

இரண்டு தடுப்பூசிகள் போட்ட பிறகு கரோனா பாதிப்பு: ஃபாரா கான் பகிர்வு
Updated on
1 min read

முழுதாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் தனக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் ஃபாரா கான் கூறியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பகுதியில் இது குறித்துப் பகிர்ந்துள்ளார்.

’சூப்பர் டேன்ஸர் சாப்டர் 4’ என்கிற நிகழ்ச்சியில் தற்போது நடுவராக இருந்து வரும் ஃபாரா கான், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அவரவரிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார். திங்கட்கிழமை அன்று இதற்கான படப்பிடிப்பில் கான் கலந்து கொண்டிருந்தார். அவருடன் ஷில்பா ஷெட்டியும் இன்னொரு நடுவராக இருந்தார்.

இது தவிர அமிதாப் பச்சன் வழங்கும் ’கவுன் பனேகா க்ரோர்பதி 13’ நிகழ்ச்சியிலும் சமீபத்தில் விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

"நாம் கருப்புப் பொட்டு வைக்கததால் இப்படி ஆனது என்று யோசிக்கிறேன். இரண்டு முறை தடுப்பூசி போட்ட பின்பும், அப்படி இருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடனே பெரும்பாலும் வேலை செய்தும் கூட எனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தேனோ அவர்கள் அனைவரிடமும் பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.

ஆனால் நான் ஒருவரை மறந்துவிட்டேன். (வயதாகிவிட்டது, ஞாபக மறதி). நீங்கள் உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்" என்று ஃபாரா கான் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் சோனு சூட் மற்றும் நித்தி அகர்வால் இருவரையும் வைத்து ’சாத் க்யா நிபாஓகே’ என்கிற பாடல் வீடியோவை ஃபாரா இயக்கியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in