

'கங்குபாய் காட்யவாடி' திரைப்படம் தொடர்பாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் படத்தின் நாயகி ஆலியா பட் மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிரான நடவடிக்கைக்கு, அடுத்த நீதிமன்ற விசாரணைத் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கங்குபாய் காட்யவாடி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1960களில், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. ஆலியா பட், கங்குபாயாக நடித்துள்ளார்.
இந்நிலையில், உண்மையான கங்குபாயின் தத்துப்பிள்ளை என்று சொல்லிக்கொள்ளும் பாபுஜி ஷா என்பவர், ஆலியா பட், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். பெருநகர நீதிபதி மூலம் அவர்களுக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
செப்டம்பர் 7ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை முடியும் வரை மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
'தி மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை' என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாவதாகவும், இதில் கங்குபாயின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவரது அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலும் படம் இருப்பதாக பாபுஜி ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், பன்சாலி தரப்பு வழக்கறிஞர், தங்களுக்கு பாபுஜி ஷா என்று ஒருவர் இருப்பதைப் பற்றியே தெரியாது என்று கூறியுள்ளார்.
படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற பாபுஜி ஷாவின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், பாபுஜி ஷா தான் கங்குபாயின் தத்துப்பிள்ளை என்பதை நிரூபிக்கத் தவறியிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.