ஆபாசப் பட செயலி வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்

ஆபாசப் பட செயலி வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
Updated on
1 min read

ஆபாசப் படம் தயாரித்து அவற்றை 'ஹாட்ஷாட்ஸ்' என்ற செல்போன் செயலின் மூலம் பிரபலப்படுத்தி சம்பாதித்த வழக்கில் தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய உதவியாளர் ரயான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார்.

மேலும், ராஜ் குந்த்ராவை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை போலீஸாரின் இந்த நடவடிக்கை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதராக ட்வீட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா (45) தான் முக்கிய குற்றவாளி என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குந்த்ராவின் குற்றங்களை உறுதி செய்ய தேவையான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி:

கடந்த பிப்ரவரி மாதம் இளம் பெண் ஒருவர் மும்பை போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்ற தன்னை சிலர் ஏமாற்றி நிர்பந்தப்படுத்தி ஆபாசப் படத்தில் நடிக்கவைத்ததாகவும், மீண்டும் மீண்டும் அதே மாதிரியான படங்களில் நடிக்க நிர்பந்தப்படுத்தி மிரட்டுவதாகவும் கூறினார்.

இந்த வழக்கு விசாரணையை போலீஸ் கையில் எடுத்தது. விசாரணை தொடங்கியதில் இருந்தே போலீஸ் வளையத்துக்குள் நிறைய முக்கியப் புள்ளிகளின் பெயர் அடிபட்டது. இதனால், வழக்கு அதிக கவனம் பெற்றது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மும்பையைச் சேர்ந்த கஹ்னா வஷிஷ்ட் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த ஆதாரங்களின் படி போலீஸார் ராஜ் குந்த்ராவை கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஹ்னா வஷிஷ்ட், உமேஷ் காமத் ஆகிய இருவரும் ஆபாசப் படங்கள் தயாரிப்பு மட்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தான் ஆபாசப் படங்களுக்கான கதையை எழுதியுள்ளனர்.

படத்தயாரிப்பு, கதை, படப்பிடிப்பு ஆகியன குறித்த தகவல்கள் அனைத்தையும் இமெயில் மூலம் கஹ்னாவும், உமேஷும் தொடர்ந்து ராஜ் குந்த்ராவுக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், ராஜ் குந்த்ரா தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார். "Hotshots" என்ற செயலியை தான் பிரதீப் பக்‌ஷி என்பவரிடம் விற்றுவிட்டதாக கூறினார். பிரதீப் பக்‌ஷியையும் போலீஸார் தேடி வருகின்றனர். ஆனால், ராஜ் குந்த்ரா ஒரு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்து அதில் ஹாட்ஷாட்ஸ் செயலி குறித்தும் அதில் வரும் படங்கள் குறித்தும் பலருக்கும் பகிர்ந்துள்ளது முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in