

'லால் சிங் சட்டா' திரைப்படத்தின் லடாக் படப்பிடிப்பின்போது அந்த இடத்தில் குப்பை போட்டு அசுத்தம் செய்யவில்லை என்று படத்தின் தயாரிப்புத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கான 'லால் சிங் சட்டா'வில் ஆமிர் கான் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லடாக்கில் நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் என்று கூறப்படும் பகுதியை வீடியோ எடுத்திருந்த ஜிக்மத் லடாகி என்கிற நபர், ட்விட்டரில் அதைப் பகிர்ந்து, ஆமிர் கானைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
"லடாக்கின் வாகா கிராமத்தினருக்கு பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' குழுவினர் விட்டுச் சென்ற பரிசு இது. 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், தூய்மை பற்றியெல்லாம் ஆமிர் கான் பெரிதாகப் பேசுவார். ஆனால், அவரது படப்பிடிப்பு இப்படித்தான் அசுத்தமாக நடந்துள்ளது" என்று ட்வீட் செய்திருந்தார் லடாகி. இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
தற்போது இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"எங்கள் படப்பிடிப்பின் சுற்றுப்புறம் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம். படப்பிடிப்புத் தளத்தில் எப்போதுமே குப்பை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய எங்களிடம் தனியாக ஒரு அணியே உள்ளது. அன்றைய தினத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புத் தளத்தையும் முழுதாக மீண்டும் சோதனை செய்வோம். முழு படப்பிடிப்பு முடிந்தவுடன், நாங்கள் ஆரம்பிக்கும்போது இருந்ததை விட இன்னும் சுத்தமாகவே அந்த இடத்தை விட்டுச் செல்வோம்.
எங்கள் படப்பிடிப்புத் தளம் தூய்மையாக இல்லை என்று சில புரளிகள் குற்றச்சாட்டுகளாக உலவுகின்றன என்று நினைக்கிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும் இடங்கள், சம்பந்தப்பட்ட உள்ளூர் அரசு அதிகாரிகள் எந்த நேரமும்ம் வந்து பார்த்து சோதனையிடத் தயாராகவே இருக்கும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.