

நடிகை கங்கணா ரணாவத் பிரபல ஆங்கில ரியாலிட்டி நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்புக்குத் தொகுப்பாளராகிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார்.
’டெம்ப்டேஷன் ஐலேண்ட்’ என்கிற பெயரில் அமெரிக்காவில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி இது. இதில் ஜோடிகள், நிகழ்ச்சி முடியும் குறிப்பிட்ட காலம் வரை பிரிந்திருந்து, எதிர் பாலினத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் காதலின், உறவின் பலத்தை எப்படி நிரூபிக்கிறார்கள், கடைசியில் தாங்கள் காதலித்த நபருடனே மீண்டும் சேர்ந்து செல்கிறார்களா அல்லது புது ஜோடியைத் தேடிக் கொள்கிறார்களா என்பதே இந்த நிகழ்ச்சி.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. இந்தியப் பதிப்புக்கு நடிகை கங்கணா ரணாவத் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் கங்கணா கையெழுத்திட்டுவிட்டதாகவும், விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கங்கணா நடிப்பில் 'தலைவி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இது தவிர 'தாக்கட்', 'மணிகார்னிகா ரிட்டர்ன்ஸ்', 'தேஜஸ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கங்கணா. இந்தியாவின் அவசர நிலை காலகட்டத்தைப் பற்றிச் சொல்லும் 'எமர்ஜென்சி' திரைப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு பக்கம் அவரது தயாரிப்பு நிறுவனம், நவாசுதின் சித்திக் நடிக்கும் 'டிகு வெட்ஸ் ஷெரு' என்கிற வெப் சீரிஸைத் தயாரிக்கிறது.