சஞ்ஜய் லீலா பன்சாலி - ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?

சஞ்ஜய் லீலா பன்சாலி - ஆலியா பட் திரைப்படம்: நேரடி ஓடிடி வெளியீடா?
Updated on
1 min read

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்திருக்கும் 'கங்குபாய் கதியாவாடி' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குபாய் கதியாவாதி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் பல பாலிவுட் திரைப்படங்களைப் போல 'கங்குபாய் கதியாவாடி' திரைப்படமும் ஓடிடியில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. ஆனால், திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்படும் வரை காத்திருந்து திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிட இயக்குநர் பன்சாலி முடிவெடுத்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்து பன்சாலி முழு திருப்தி அடைந்திருப்பதாகவும், பன்சாலி எடுத்த படங்களில் மிக பிரம்மாண்டமானதாகவும், சிறப்பாகவும் படம் இருப்பதால் கண்டிப்பாக இதை ஓடிடியில் வெளியிட முடியாது என்று பன்சாலி கருதுவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொற்றுக் காலம் தொடர்ந்தாலும் எவ்வளவு நாட்கள் ஆகிறதோ அவ்வளவு நாட்கள் காத்திருக்க பன்சாலி தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in