விஜய் சேதுபதிக்கு பதில் நாக சைதன்யா: படப்பிடிப்பு தொடக்கம்
ஆமிர் கானின் 'லால் சிங் சட்டா' படத்தில், விஜய் சேதுபதிக்கு பதில் நாக சைதன்யா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). இது ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது. தற்போது இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கான 'லால் சிங் சட்டா'வில் ஆமிர் கான் நடித்து வருகிறார்.
கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, அனுமதி கிடைக்கப்படும் நேரத்தில் மட்டும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து லடாக் பகுதிகளில் போர்க்களக் காட்சிகளைப் படமாக்கப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதில் நாயகன் ஆமிர் கானின் நெருங்கிய நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க, முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்புத் தேதிகளைச் சரியாக ஒதுக்கமுடியாத காரணத்தால் அவர் விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு பதில் நாக சைதன்யா நடிப்பார் என்று கூறப்பட்டது.
தற்போது அதை உறுதி செய்யும் வண்ணம், நாக சைதன்யா இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் நாக சைதன்யாவும், ஆமிர் கானும் இந்திய ராணுவ வீரர்கள் சீருடையில் இருக்கின்றனர். எனவே இது போர்க்களத்தில் நடக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு என்பது தெளிவாகிறது.
'வார்' திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை அமைத்த பர்வேஸ் ஷேக், இந்தப் போர்க்களக் காட்சிகளை அமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் சல்மான் கானும், ஷாரூக் கானும் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
