நடிகர் சல்மான் கானுக்கு போலீஸார் சம்மன்

நடிகர் சல்மான் கானுக்கு போலீஸார் சம்மன்
Updated on
1 min read

சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சல்மான் கான், அவரது சகோதரி உள்ளிட்ட ஆறு பேருக்கு சண்டிகர் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சண்டிகர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் குப்தா. இவர் சமீபத்தில் நடிகர் சல்மான் கான், அவரது சகோதரி அல்விரா கான் உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார் அளித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின் ‘பீயிங் ஹ்யூமன்’ நிறுவனத்தின் பெயரில் ஒரு நகைக்கடையை சண்டிகர் நகரில் தான் தொடங்கியதாகவும், அதற்காக ஒரு பெரிய தொகையையும் தான் செலவழித்துள்ளதாகவும் அருண் குப்தா கூறியுள்ளார்.

மேலும், கடைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் விளம்பரப் பணிகளுக்கான பொறுப்பை சல்மான் கான் தரப்பில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். ஆனால், கடை திறந்து பல நாட்களாகியும் அதற்குண்டான எந்த வேலைகளையும் செய்யாமல் சல்மான் கானின் 'பீயிங் ஹ்யூமன்' அறக்கட்டளை நிர்வாகத்தினர் இழுத்தடித்துள்ளனர் என்று அருண் குப்தா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல கடை திறப்பு விழாவுக்கு சல்மான் கான் கலந்து கொள்வதாகக் கூறியிருந்த நிலையில், அவருக்கு பதில் அவரது மைத்துனர் ஆயுஷ்மான் ஷர்மா கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

கடைக்குத் தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், கடை பூட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் அருண் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருண் குப்தாவின் புகாரின் பேரில் நடிகர் சல்மான் கான், அவரது சகோதரி அல்விரா கான், 'பீயிங் ஹ்யூமன்' அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட ஆறு பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், வரும் ஜூலை 13ஆம் தேதி அவர்கள் அனைவரையும் நேரில் ஆஜராகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in