ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
Updated on
1 min read

பல்வேறு மொழிகளில் உருவாகும் ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'பதாய் ஹோ', 'தல்வார்', 'ராஷி' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்த நிறுவனம் ஜங்க்லீ பிக்சர்ஸ். தற்போது தங்களுடைய புதிய படத்தை அறிவித்துள்ளது. ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கைக் கதையை அனைத்து மொழிகளிலும் படமாக உருவாக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை உருவாக்கியவர் பி.ராஜகோபால். அவர் மீது அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களைச் சுமத்திய ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோ, ஆடியோ, உண்மைச் செய்திகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர் ராஜகோபால். அப்படிப்பட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்தில் சிக்கியதும், அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுமான இந்தச் சம்பவங்கள், உண்மையான ஆதாரப் பின்னணியில் இப்படத்தில் இடம்பெறவுள்ளன.

இந்தப் படம் தொடர்பாக ஜீவஜோதி சாந்தகுமார் கூறியிருப்பதாவது:

"எனது வாழ்வில் அடைந்த துன்பங்களைத் தாண்டி, உணர்வுபூர்வமிக்க, சட்டத்தின் வழியிலான எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை ஜங்க்லீ பிக்சர்ஸ் படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. எனது கதையைப் பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்"

இவ்வாறு ஜீவஜோதி சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயரை இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in