

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் மறைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் தனது வலைப்பூவிலும், ட்விட்டர் பக்கத்திலும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். இந்தத் தகவலை திலீப் குமாரின் மருத்துவர் ஜலீல் பார்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திலீப் குமாரின் மறைவுக்கு இந்தியத் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சன், ''முன்னெப்போதும் இல்லை, இனியும் வரப்போவதில்லை. நான் எனது ஆதர்ச நாயகனை இழந்துவிட்டேன், ஒரு பல்கலைக்கழகத்தை இழந்துவிட்டேன்.
திலீப் குமாருக்கு முன், திலீப் குமாருக்குப் பின் என்றுதான் இந்திய சினிமாவின் வரலாறு என்றும் எழுதப்படும். அவரது மறைவு தந்த துக்கத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்று தனது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார். இதில் திலீப் குமாருடன்தான் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
தன் ட்விட்டர் பக்கத்திலும் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்திருக்கும் அமிதாப் பச்சன், கூடுதலாக, "அவரது ஆன்மா சாந்தியடைய, அவரது இழப்பை அவர் குடும்பத்தினர் தாங்கிக்கொள்ள என் பிரார்த்தனைகள். பெரும் சோகத்தில் இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.