

இயக்குநரும், நடிகை மந்திரா பேடியின் கணவருமான ராஜ் கவுஷல் காலமானார். அவருக்கு வயது 49.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் மந்திரா பேடி. 90களில் சீரியல்களில் நடிகையாக அறிமுகமான மந்திரா பேடி, தொடர்ந்து இந்தியில் ‘டிடிஎல்ஜே’, ‘பாதல்’, உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இது தவிர தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். இவரது கணவர் ராஜ் கவுஷல். இவர் ‘ஆண்டனி கான் ஹே’, ‘ஷாதி கா லட்டூ’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இது தவிர சில படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
1999ஆம் ஆண்டு மந்திரா பேடி - ராஜ் கவுஷல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு வீர் (10), தாரா (5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 30) அதிகாலை மாரடைப்பால் ராஜ் கவுஷல் காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் ரோஹித் ராய், நடிகை நேஹா தூபியா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.