எனது மகன் கோவிட் விதிமுறைகளை மீறி வெளியே திரியவில்லை: டைகர் ஷெராஃபுக்குத் தாயார் ஆதரவு

மகன், மகளுடன் ஆயிஷா.
மகன், மகளுடன் ஆயிஷா.
Updated on
1 min read

தனது மகன் கோவிட் விதிமுறைகளை மீறி வெளியே திரியவில்லை என்று நடிகர் டைகர் ஷெராஃபின் தாய் ஆயிஷா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

வியாழக்கிழமையன்று பாந்த்ரா பகுதியில், நடிகர் டைகர் ஷெராஃபும், அவரது காதலி என்று கிசுகிசுக்கப்படும் நடிகை திஷா படானியும் ஜிம்முக்குச் சென்று விட்டுத் திரும்பும்போது, வீட்டுக்குச் செல்லாமல் பாந்த்ரா பகுதியில் காரில் வலம் வந்துள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் இவர்களது வண்டியை வழிமறித்தனர். அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வந்ததால் இருவர் மீதும் கோவிட்-19 கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வழக்குப் பதியப்பட்டது.

ஆனால், இதைப் பற்றிய செய்தியின் பின்னூட்டத்தில் பதிவிட்டிருக்கும் டைகர் ஷெராஃபின் தாய் ஆயிஷா, "உண்மையைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். காவல்துறையினர் இருவரின் ஆதார் அட்டையையும் சோதித்தனர். அவ்வளவே. இதுபோன்ற சமயத்தில் வெளியே திரிவதில் யாருக்கும் ஆர்வமில்லை. எனவே, இதுபோன்ற விஷயங்களைப் பேசும் முன்னர் உண்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், உங்கள் தகவலுக்கு... அத்தியாவசியத் தேவைக்கு வெளியே செல்லலாம். ஒருவரைப் பற்றித் தவறாக எழுதுவதற்கு பதில், ஏன் யாரும் டைகர், முன்களப் பணியாளர்களுக்கு விநியோகிக்கும் இலவச உணவைப் பற்றி எழுதவில்லை? ஏனென்றால் அவனே அதைப் பற்றிச் சொல்லிக்கொள்வதில்லை. எனவே எதுவும் தெரியாமல் தீர்மானிக்காதீர்கள், நன்றி" என்று கூறியுள்ளார்.

ஆயிஷா இப்படிக் கூறியிருந்தாலும், மும்பை காவல்துறையினரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே, இந்த இரண்டு நடிகர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது குறித்து, அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in