‘நான் அவன் இல்லை’ - பிரபல விமர்சகரின் பதிவுக்கு நடிகர் கோவிந்தா பதிலடி

‘நான் அவன் இல்லை’ - பிரபல விமர்சகரின் பதிவுக்கு நடிகர் கோவிந்தா பதிலடி
Updated on
1 min read

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இப்படம் கடந்த மாதம் ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியானது. வெளியான முதல்நாள் பல கோடி பார்வைகளை இப்படம் பெற்றாலும், படம் விமர்சன ரீதியாகக் கடுமையாக சாடப்பட்டது.

அந்த வகையில் பிரபல பாலிவுட் விமர்சகரான கேஆர்கே என்று அழைக்கப்படும் கமால் ஆர். கான் ‘ராதே’ படத்தை மிக மோசமாக சாடியிருந்தார். அவரது விமர்சனம் சல்மான் கான் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் சல்மான் கானின் வழக்கறிஞர் குழுவின் சார்பில் கேஆர்கே மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது. விமர்சகர் கேஆர்கே சல்மான் கான் குறித்தும் அவரது தொண்டு நிறுவனமான பீயின் ஹ்யூமன் குறித்தும் அவதூறு பரப்பியதாக சல்மான் கானின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. விமர்சகர் கேஆர்கேவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் கேஆர்கே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவில் ‘கோவிந்தா பாய்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்’ என்று குறிப்பிட்டுருந்தார்.

இப்பதிவை பகிர்ந்த பலரும் அது நடிகர் கோவிந்தா குறிப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். சல்மான் கான் ரசிகர்கள் பலரும் நடிகர் கோவிந்தாவை சாடத் தொடங்கினர்.

இந்நிலையில் நேற்று (03.06.21) இந்த விவகாரம் குறித்து நடிகர் கோவிந்தா தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நான் விமர்சகர் கேர்கே என்பவருக்கு ஆதரவு கொடுப்பதாக சில ஊடக செய்திகளை படித்தேன். பல ஆண்டுகளால நான் கேர்கே-வுடன் தொடர்பில் இல்லை. தொலைபேசி அழைப்புகளோ, சந்திப்புகளோ, குறுஞ்செய்திகளோ எதுவும் இல்லை. அந்த பதிவில் அவர் என் பெயரில் இருக்கும் யாரையோ குறிப்பிடுகிறார். அதில் அவர் என்னை டேக் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களில் அவர் என்னைப் பற்றியும் என் படங்களில் தேவையற்ற கருத்துக்களை பேசியும் எழுதியும் இருக்கிறார்.

இவ்வாறு கோவிந்தா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in