

இயக்குநர் ஆனந்த் எல்.ராய் திரைப்படத்திலிருந்து நடிகர் கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டதாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு, தொழில் முறையாகச் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதால் ’தோஸ்தானா 2’ திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யனைத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் நீக்கினார். தொடர்ந்து, ஷாரூக் கானின், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த, இயக்குநர் அஜய் பல்லின் படமான ’குட்பை ஃப்ரெட்டீ’யிலிருந்து கார்த்திக் ஆர்யன் அவராகவே விலகினார். ஆனால், 'தோஸ்தானா 2'வைப் போல இதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவரும் தயாரிப்புத் தரப்பும் சுமுகமாகப் பேசிய பின்னரே விலகுவது பற்றிய முடிவை எடுத்திருந்தார்.
தொடர்ந்து ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில் நடிக்கவிருந்த கேங்ஸ்டர் திரைப்படத்திலிருந்தும் கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. மேலும், இதில் அவருக்கு பதிலாக ஆயுஷ்மான் குரானா நடிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்து ஆனந்த் எல்.ராய் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
''இவை வெறும் புரளிகள், கார்த்திக் ஆர்யனை அணுகி, படத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆயுஷ்மானை வேறொரு திரைப்படத்துக்காக நாங்கள் சந்தித்தோம். வந்த செய்திகள் குழப்புகின்றன'' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திக் ஆர்யன் நடிப்பில் 'பூல் புலைய்யா 2', 'தமாகா' ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.