சோனு சூட் பெயரில் இறைச்சிக் கடை ஆரம்பித்த ரசிகர்

சோனு சூட் பெயரில் இறைச்சிக் கடை ஆரம்பித்த ரசிகர்
Updated on
1 min read

நடிகர் சோனு சூட் பெயரில் இறைச்சிக் கடை ஒன்றை அவரது ரசிகர் தொடங்கியுள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் கரோனா நெருக்கடி காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார்.

இன்று வரை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்பாடு செய்வது எனப் பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள், அவரால் உதவி பெற்றவர்கள் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகின்றனர்.

அப்படி ஒரு ரசிகர், தெலங்கானாவில் சோனு சூட் பெயரில் இறைச்சிக் கடையைத் தொடங்கியுள்ளார். இது தனியார் சேனல் ஒன்றில் செய்தியாக வந்துள்ளது. இந்தக் காணொலியை சோனு சூட் பகிர்ந்துள்ளார். மேலும், "நான் சைவம். என் பெயரில் இறைச்சிக் கடையா? இவர் சைவத்தில் எதையாவது ஆரம்பிக்க நான் உதவலாமா?" என்று விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.

சோனு சூட் மற்றவர்களுக்கு உதவுவதைப் போலவே இந்த இறைச்சிக் கடையின் உரிமையாளரும் குறைந்த விலையில் இறைச்சி விற்று வருவதாகப் பயனர் ஒருவர் சோனு சூட்டுக்குப் பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in