

அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பெல் பாட்டம்' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம் திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின் போது லண்டனில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.
இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கரோனா 2-வது அலை தீவிரத்தால், 'பெல் பாட்டம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது 'பெல் பாட்டம்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே, அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.