ஓடிடி சாதனை படைத்த ’ராதே’: ரசிகர்களுக்கு சல்மான் கான் நன்றி

ஓடிடி சாதனை படைத்த ’ராதே’: ரசிகர்களுக்கு சல்மான் கான் நன்றி
Updated on
1 min read

தனது ரசிகர்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கும் நடிகர் சல்மான் கான், தனது ’ராதே’ திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் நடித்துள்ள படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது.

ஊரடங்கு தொடர்வதாலும், இனிமேலும் ரசிகர்களைக் காக்க வைக்க முடியாது என்பதாலும் படத்தை மே 13 அன்று ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியிட்டுள்ளனர். விமர்சன ரீதியாக கடுமையாக சாடப்பட்டாலும் படத்தை ஒரே நாளில் 40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக ஜீ5 தரப்பு அறிவித்துள்ளது.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சல்மான் கான், "அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள். பதில் நன்றியாக, முதல் நாளில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை ராதேவுக்குத் தந்ததற்கு அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் திரைத்துறை பிழைக்காது. நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ’ராதே’ திரைப்படத்தை 40 நாடுகளில் பார்க்க முடியும். இது தவிர திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் சில அயல் நாடுகளில் திரையரங்கிலும் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியாவில் கரோனா சூழல் முடிந்து சகஜமான பிறகு திரையரங்கிலும் ’ராதே’ வெளியாகும் என்று சல்மான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in