ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும்: கங்கணா

ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும்: கங்கணா
Updated on
1 min read

கோவிட்-19 தொற்று தீவிரமடைந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், மக்கள் அதிகமாக மரங்களை நட வேண்டும் என்றும், ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர் ட்வீட்டுகளைப் பதிவு செய்திருக்கும் கங்கணா, "எல்லோரும் ஆக்சிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகளை அதிகமாக உருவாக்கி வருகின்றனர். பல டன் ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்கின்றனர். இந்தச் சுற்றுச்சூழலிலிருந்து வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜனுக்கு நாம் எப்படி ஈடுகட்டப் போகிறோம்? நமது தவறுகளிலிருந்தும், அதன் மோசமான விளைவுகளிலிருந்தும் நாம் எதுவும் கற்கவில்லை என்றே தெரிகிறது. மரங்களை நடுங்கள்.

மனிதர்களின் தேவைக்கு மேலும் மேலும் ஆக்சிஜனைத் தரும் அரசுகள் இயற்கையின் நிவாரணத்துக்கும் ஏதாவது அறிவிக்க வேண்டும். ஆக்சிஜன் பயன்படுத்துபவர்கள் காற்றின் தரத்தை உயர்த்த உறுதிமொழி எடுக்க வேண்டும். இயற்கைக்கு எதுவும் கொடுக்காமல் வெறுமனே எடுத்துக்கொள்ளும் பாவப்பட்ட பூச்சிகளாக நாம் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறோம்?

நுண்ணுயிர்களோ அல்லது பூச்சிகளோ எது இந்த பூமியை விட்டு மறைந்தாலும் அது நமது மண்ணின் வளத்தை, அன்னை பூமியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை இல்லாத குறையை இந்த பூமி உணரும். ஆனால் மனிதர்கள் மறைந்துபோனால் இந்த பூமி இன்னும் இன்னும் செழிப்பாகும். நீங்கள் இந்த பூமியை நேசிக்கவில்லையென்றால், அதன் குழந்தைகள் இல்லையென்றால் நீங்கள் தேவையில்லாத விஷயமே. மரங்களை நடுங்கள்" என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in