தொழில்முறையில் செயல்படவில்லை: 'தோஸ்தானா 2'-விலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் ஆர்யன்

தொழில்முறையில் செயல்படவில்லை: 'தோஸ்தானா 2'-விலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் ஆர்யன்
Updated on
1 min read

தொழில்முறையாக நடந்து கொள்ளவில்லை என்பதால் 'தோஸ்தானா 2' திரைப்படத்திலிருந்து கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டுள்ளார். இனி தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் கரண் ஜோஹரின் எந்த ஒரு திரைப்படம் தொடர்பான வாய்ப்பும் வழங்கப்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2019ல் கார்த்திக் ஆர்யன் 'தோஸ்தானா 2'-வில் ஒப்பந்தம் செய்யப்பட்டதை உறுதி செய்தார். இந்தக் கதாபாத்திரம் தனது எல்லையை விரிவாக்கும் என்று பல பேட்டிகளில் பேசி வந்திருக்கிறார். இவரோட ஜான்வி கபூர், லக்‌ஷ்யா உள்ளிட்டவர்கள் நடிக்க காலின் டி குன்ஹா இயக்குவதாக இருந்தது.

முதல் பாகத்தில் ப்ரியங்கா சோப்ரா, ஜான் அப்ரகாம், அபிஷேக் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். தன் பாலின ஈர்ப்பை வெகுஜன சினிமாவில் முதன்முறை சொன்ன திரைப்படம் என்கிற பெயரை தோஸ்தான பெற்றது. வெளியான சமயத்தில் சர்ச்சை எழுந்தாலும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 'தோஸ்தானா 2' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. கிடத்தட்ட 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் "தோஸ்தானா 2 திரைப்படத்தின் நடிகர் தேர்வு மீண்டும் நடைபெறும். இதற்கான காரணம் குறித்து நாங்கள் கண்ணியத்துடன் அமைதி காக்க முடிவெடுத்துள்ளதால் தொழில்முறை காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதில் யார் பெயரும் இல்லை என்றாலும், கார்த்திக்கின் முறையற்ற அணுகுமுறையால் வேறு வழியில்லாமல் இந்த முடிவை தயாரிப்பு தரப்பு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த தேதியில் கார்த்திக் ஆர்யன் படப்பிடிப்புக்கு வருவார் என்பது குறித்து சரியாகத் தெரிவிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸுக்குக் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்று தெரிகிறது.

இது தவிர கரண் ஜோஹர் தயாரிப்பில் 'கிரிக்கெட் ஸ்டோரி' என்கிற படத்திலும் கார்த்திக் ஆர்யன் நடிப்பதாக இருந்தது குஞ்ஜன் சக்சேனா திரைப்படத்தின் இயக்குநர் ஷரன் சர்மா இதை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திலும் கார்த்திக்குக்கு பதிலாக வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in