

தன்னிடம் உதவி என்று கேட்டு வரும் ஆயிரக்கணக்கான அழைப்புகளில் பலருக்குத் தன்னால் உதவ முடியவில்லையே என்று நடிகர் சோனு சூட் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார். இவற்றோடு கல்வி உதவித்தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு என எண்ணற்ற உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள், கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை நிறுவனம் சோனு சூட்டைப் பாராட்டும் வண்ணம் தங்களது போயிங் 737 விமானத்தில் அவரது முகத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது. இப்படித் தொடர்ந்து நல உதவிகள் செய்து வரும் சோனு சூட், வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், உதவி கேட்டுத் தனக்கு எண்ணற்ற அழைப்புகள் வருகின்றன என்றுப் பகிர்ந்துள்ளார்.
"காலையிலிருந்து என்னால் என் தொலைப்பேசியை கீழே வைக்க முடியவில்லை. இந்தியா முழுவதிலுமிருந்து மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், ஊசிகள் என ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் அதில் பலருக்கு என்னால் உதவ முடியவில்லை. நிர்கதியாக உணர்கிறேன். இந்தச் சூழல் அச்சத்தைச் தருகிறது. தயவு செய்து வீட்டில் இருங்கள். முகக் கவசம் அணியுங்கள். தொற்றிலிருந்து உங்களைக் காத்து கொள்ளுங்கள்.
ஆனால் என்ன ஆனாலும் நான் இன்னும் உதவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்தால் பல உயிர்களைக் காக்கலாம் என்பதை உறுதியாக நம்புகிறேன். யார் மீதும் பழி போடாமல் உதவி தேவை என்று இருப்பவர்களுக்கு முன் வந்து உதவுவோம். இயலாதவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வோம். இணைந்து உயிர்களைக் காப்போம் என்றும் உங்களுக்காக இருக்கிறேன்" என்று சோனு சூட் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமை அன்று சோனு சூடுக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.