

திரைத்துறையில் சக பெண் கலைஞர்களிடமிருந்து தனக்கு ஆதரவோ, வாழ்த்தோ கிடைத்ததில்லை என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார். தான் ஏன் ட்விட்டரில் பகிர்கிறேன் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
"இந்தத் துறையில் நான் ஆதரிக்காத, போற்றாத ஒரு நடிகை கூட இல்லை. இதோ அதற்குச் சான்று. ஆனால், அவர்கள் யாருமே எனக்கு வாழ்த்தோ, ஆதரவோ கூறியதில்லை. ஏன் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் ஏன் எனக்கு எதிராகத் திரள்கிறார்கள்? ஏன் என்னையும், என் நடிப்பையும் தாண்டி என்னைப் பார்க்க வேண்டும் என்கிற சூழ்ச்சி? நன்றாக யோசியுங்கள்" என்று கங்கணா ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, கங்கணாவின் ரசிகர் பக்கம் ஒன்று, அவர் இன்னொரு நடிகையைப் பாராட்டும் காணொலி ஒன்றைப் பகிர்ந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த ட்வீட்டை கங்கணா செய்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "அவர்கள் திரைப்படங்களின் திரையிடலுக்கு என்னைத் தொலைபேசியிலோ, நேரடியாகச் செய்தி அனுப்பியோ வரச் சொல்வார்கள். நானும் செல்வேன். எனக்குப் பூக்கள் அனுப்பி, செல்லம் என்று கொஞ்சுவார்கள். ஆனால், எனது படத்தின் திரையிடல்களுக்கு அழைக்க முற்படும்போது எனது அழைப்புகளை எடுக்கவே மாட்டார்கள். இன்று நான் ஒவ்வொரு நாளும் அவர்களை ஆட்டுவிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான்" என்று கங்கணா குறிப்பிட்டுள்ளார்.
கங்கணாவின் ட்வீட்டுக்கு ரசிகர் ஒருவர், "நீங்கள் உங்கள் சக கலைஞர்களிடம் நட்போடு இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தீர்கள் போல. ஆனால் அதை, பதிலுக்குக் காட்டும் பக்குவம் அவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது" என்று எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கங்கணா, "ஆம். நான் எனது கலையில் நேரம் காலம் தெரியாத அளவுக்கு எப்போதும் ஆழ்ந்திருப்பேன். அந்தச் சிறிய வட்டத்திலிருந்து நான் வெளியே வந்து பார்க்கும்போது இந்தப் பெண்கள் என்னைச் சுற்றி மோசமாக, நான் ஏதோ பாதுகாப்பின்மையில் இருக்கும், யாருக்கும் ஆதரவு தராத ஆளைப் போலச் சித்தரித்து வைத்திருப்பார்கள். அதனால்தான் நான் இங்கு ட்விட்டரில் வெளிப்படையாகப் பேசிப் பதிவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.