

பாலிவுட்டில் தனது 25-வது படத்தை விசேஷமானதாக ஆக்க 'விக்ரம் வேதா' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றி வருகிறார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம்தான் இருக்கிறது. இந்தியில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து சஷிகாந்த் தயாரிக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. புஷ்கர் - காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.
விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும், வேதா கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் நடிக்கின்றனர். கடைசியாக 2019ஆம் ஆண்டு 'வார்' திரைப்படத்தில் ஹ்ரித்திக் நடித்திருந்தார். அதன் பிறகு 'விக்ரம் வேதா'வில்தான் நடிக்கிறார்.
குறிப்பாக, இந்தப் படம் ஹ்ரித்திக்கின் 25-வது படமாக வெளியாகவுள்ளதால் இதற்கான விசேஷ முன் தயாரிப்புகளில் அவர் இறங்கியுள்ளார். கடந்த இரண்டு மாத காலமாகவே வேதா கதாபாத்திரத்துக்கான உடல் அமைப்பு, வசன உச்சரிப்பு என்று கதாபாத்திரத்தை மெருகேற்றும் வகையில் தனியாக அர்ப்பணிப்புடன் பயிற்சி செய்து வருகிறார் ஹ்ரித்திக்.
தனது 25-வது படம் என்றும் நினைவில் இருக்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதால் ஹ்ரித்திக் இப்படி விசேஷ முயற்சிகளைச் செய்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்று தெரிகிறது.