மகாராஷ்டிர அரசைக் கிண்டல் செய்த கங்கணா

மகாராஷ்டிர அரசைக் கிண்டல் செய்த கங்கணா
Updated on
1 min read

ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன்னிடம் கேட்டதாக மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் சச்சின் வாஸ் கூறியதை வைத்து, நடிகை கங்கணா ரணாவத் மகாராஷ்டிர அரசைக் கிண்டல் செய்துள்ளார்.

காவல்துறை ஆணையரின் பேச்சு குறித்த செய்தி பற்றி ட்வீட் செய்துள்ள கங்கணா, "மகாராஷ்டிர அரசியல் ஊழல், மோசமான நிர்வாகம் என்று நான் கூறியபோது பல வசவுகளை, மிரட்டல்களை, விமர்சனங்களைச் சந்தித்தேன். அதை நான் எதிர்த்தேன். இந்த நகரத்துக்கான எனது விசுவாசம் பற்றிச் சந்தேகம் எழுந்தபோது நான் அமைதியாக அழுதேன். எனது வீட்டைச் சட்டவிரோதமாக இடித்தபோது பலர் அதை ஊக்குவித்தனர், கொண்டாடினர்.

வரும் நாட்களில் அவர்கள் முழுவதும் வெளிப்படுவார்கள். இன்று என் தரப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது துணிச்சலான ராஜபுதன ரத்தத்தில், இந்த பூமிக்கான உண்மையான விஸ்வாசமும், அன்பும் ஓடுகிறது. அது என்னையும் என் குடும்பத்தையும் காக்கிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. நான் உண்மையான தேசியவாதி" என்று பகிர்ந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், பாந்த்ரா பகுதியில் இருக்கும் கங்கணாவின் அலுவலகக் கட்டிடத்தின் சில பகுதிகளை, சட்டவிரோதமான கட்டுமானம் என்று காரணம் காட்டி மும்பை மாநகராட்சி இடித்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த வேலை செப்டம்பர் 9ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

தனது பங்களாவில் 40% இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கணா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கங்கணாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

இடிக்கப்பட்ட தனது பங்களாவை மீண்டும் கட்டுவதற்கு எந்தவொரு கட்டிடக்கலை நிபுணரும் வரவில்லை என்றும், அவர்களை மாநகராட்சியினர் மிரட்டியுள்ளனர் என்றும் கங்கணா குற்றம் சாட்டியது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in