சமூக வலைதளப் பக்கத்திலிருந்து விலகினார் ஆமிர்கான்

சமூக வலைதளப் பக்கத்திலிருந்து விலகினார் ஆமிர்கான்
Updated on
1 min read

சமூக வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக ஆமிர்கான் அறிவித்துள்ளார்.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் தான் ஆமிர்கான் கவனம் செலுத்தி வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்து வருகிறார்.

நேற்று (மார்ச் 14) ஆமிர்கானுக்குப் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஆமிர்கானுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்குமே இன்று (மார்ச் 15) தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்து வந்தார் ஆமிர்கான்.

அதனைத் தொடர்ந்து தான் சமூக வலைதளப் பக்கத்திலிருந்து விலகுவதாக ஆமிர்கான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆமிர்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"எனது பிறந்த நாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்புக்கு நன்றி. என் மனம் நிறைந்துவிட்டது. இதுதான் எனது கடைசி சமூக வலைதளப் பதிவு என்பது இன்னொரு சேதி. நான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பதாகக் கருதி அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்.

இதற்கு முன்னால் இருந்ததுபோலவே தொடர்பில் இருப்போம். ஆமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரபூர்வ சேனலைத் தொடங்கியுள்ளது. ஆகையால், என் எதிர்கால அப்டேட்கள், என் படங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் இனி அங்கேயே பதிவேற்றப்படும். இதுதான் அதிகாரபூர்வ ஹேண்டில் (@akppl_official)”.

இவ்வாறு ஆமிர்கான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in