

தனது அத்தனை திரைப்படங்களிலும் முற்போக்கான பெண்கள் கதாபாத்திரம் இருக்கும் என்று நடிகை அனுஷ்கா சர்மா உறுதியளித்துள்ளார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டுப் பேசியுள்ள நடிகை அனுஷ்கா சர்மா, தனக்கு எப்போதும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், சம உரிமை குறித்தே சிந்தனையிருக்கிறது என்றும், அதுவே தனது படங்களில் பிரதிபலிப்பதாகவும் கூறியுள்ளார்.
"என்னை ஒரு அலங்காரப் பொருளைப் போலப் பார்ப்பது எனக்கே போதும் என்றாகிவிட்டது. எனவே ஒரு தயாரிப்பாளராக, பெண்களைப் பிற்போக்குத்தனமாகக் காட்டக் கூடாது என்று நான் உறுதி பூண்டேன். எனவே சமூகத்தில் சம உரிமை, சுய மரியாதை, பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்த உரையாடலைத் தொடங்குவதை நோக்கியே நான் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன் என்பதற்கு எனது கதாபாத்திரத் தேர்வுகளும், தயாரிப்புகளும் சான்றாக இருக்கின்றன. துணிந்து இதை நான் செய்தது, எனக்குள் இருந்த தடைகளிலிருந்து என்னை நான் விடுவித்துக் கொண்டதைப் போல இருந்தது.
நமது திரைப்படங்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தி உள்ளது. அதைச் சரியாகச் செய்தால் எது சரி, எது தவறு என்பதை மக்கள் சரியாக உணரும் வகையில் அவர்களை மாற்ற முடியும். திரைப்படங்களில் பெண்களை எப்படிச் சித்தரிக்கிறோம் என்பதில் தெளிவிருந்தால், பெண்களை மக்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பது பற்றிய சிந்தனையை நம்மால் மாற்ற முடியும். காலங்காலமாக இருந்து வரும் பிற்போக்கு நம்பிக்கைகளை, வழக்கங்களை உடைக்க முடியும்.
திரையில் பெண்களின் சித்தரிப்பை மாற்றுவதற்கான ஒரு பங்காகவே நான் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறேன். ஒரு நடிகையாக, பின் ஒரு தயாரிப்பாளராக இதைச் செய்ய எனக்கு அதிக தன்னம்பிக்கை தேவைப்பட்டது. ஏனென்றால் நான் இதுவரை பெண்கள் எப்படி சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு எதிராக நீச்சல் போட்டுக் கொண்டிருந்தேன்" என்று அனுஷ்கா சர்மா பேசியுள்ளார்.