நீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்

நீங்கள் குற்றமற்றவர் என்றால் வழக்குத் தொடருங்கள்: டாப்ஸிக்கு கங்கணா சவால்
Updated on
1 min read

வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் நீங்கள் குற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிரூபியுங்கள் என்று நடிகை டாப்ஸிக்கு கங்கணா சவால் விடுத்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அவர் நடத்தி வந்த ஃபேண்டம் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டாளிகள், நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் அனுராக், டாப்ஸி உள்ளிட்டோரைப் பழிவாங்கும் விதமாக இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டாப்ஸிக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சோதனை குறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில், வருமான வரித்துறையினர் இல்லாத ஒன்றைத் தேடினார்கள் என்பது போல மறைமுகமாகக் குறிப்பிட்டு கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு கங்கணாவின் சகோதரி ரங்கோலி, தன்னை மலிவான நபர் என்று சொன்னதைக் குறிக்கும் வண்ணம், இப்போது வருமான வரித்துறை சோதனை வந்ததால் தான் மலிவானவள் இல்லை என்று பின்குறிப்பில் சொல்லியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் கங்கணா ரணாவத், "நீங்கள் மலிவானவர்தான். ஏனென்றால் பாலியல் குற்றங்களைச் செய்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்ணியவாதி நீங்கள். உங்களைக் கட்டுப்படுத்தும் எஜமான் காஷ்யப்பின் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013ஆம் ஆண்டும் சோதனை நடந்தது. அரசாங்க அதிகாரிகள் உங்கள் சோதனை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நீங்கள் குற்றமற்றவர் என்றால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in