அமிதாப் பச்சனுக்கு திடீர் அறுவை சிகிச்சை: ரசிகர்கள் கவலை
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகத் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் தவிர்த்து தனக்கென்று ஒரு வலைப் பக்கத்தையும் வைத்து அதில் தனது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அமிதாப் பச்சன் தனது வலைப்பக்கத்தில், ‘மருத்துவப் பிரச்சினைகள்... அறுவை சிகிச்சை... எழுத முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கமாக தனது வலைப் பக்கத்தில் நீண்ட பதிவுகளை எழுதும் அமிதாப் நேற்று வெறும் மூன்றே வார்த்தைகளில் தனக்கு அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பலரும் அமிதாப் விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அஜய் தேவ்கனின் ‘மே டே’, ரன்பீர் கபூர் நடிக்கும் ‘பிரம்மாஸ்த்ரா’, ‘பிரபாஸ் 21’ ஆகிய படங்களில் அமிதாப் நடித்து வருகிறார்.
