‘அந்தாதூன்’ இயக்குநருடன் விஜய் சேதுபதி இணையும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’

‘அந்தாதூன்’ இயக்குநருடன் விஜய் சேதுபதி இணையும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’
Updated on
1 min read

ஸ்ரீராம் ராகவன், விஜய் சேதுபதி இணையும் இந்திப் படத்துக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 'அந்தாதூன்' இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தனது அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். முந்தைய படத்தின் பிரம்மாண்ட வெற்றியால், இதில் யார் நடிப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

'மாநகரம்' இந்தி ரீமேக்கை முடித்துவிட்டு, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி கவனம் செலுத்தத் தொடங்குவார் எனத் தெரிகிறது. தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in