

‘டைகர்’ படவரிசையில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் சல்மானுக்கு வில்லனாக இம்ரான் ஹாஷ்மி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
2012ஆம் ஆண்டு சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான படம் ‘ஏக் தா டைகர்’. கபீர் கான் இயக்கிய இப்படம் பாலிவுட்டில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. 2017ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘டைகர் ஸிந்தா ஹை’ என்ற படம் வெளியானது. இப்படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்தார்.
தற்போது ‘டைகர்’ படவரிசையில் மூன்றாம் பாகமாக ‘டைகர் 3’ என்ற படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘பதான்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தை மனீஷ் ஷர்மா இயக்கவுள்ளார்.
இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் மீண்டும் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அநேகமாக சல்மான் கானுக்கு வில்லனாக இம்ரான் ஹாஷ்மி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது சஞ்சய் குப்தா இயக்கத்தில் ‘மும்பை சாகா’ என்ற படத்திலும், அமிதாப் பச்சனுடன் ‘சேரே’ என்ற படத்தில் இம்ரான் ஹாஷ்மி நடித்து வருகிறார்.