

'ஓ மை கடவுளே' படத்தின் இந்தி ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
2020-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்க படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தி ரீமேக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டமால் சைன் இந்தியா, மெர்ரி கோ ரவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 'ஓ மை கடவுளே' இந்தி ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்துவே இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு ரீமேக் பணிகளை முடித்துவிட்டு, இந்தி ரீமேக் பணிகளைத் தொடங்கவுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. தற்போது இந்தி ரீமேக்கில் நடிப்பதற்குப் பொருத்தமான நடிகர்கள் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.