பாலிவுட்டில் நாயகர்கள்தான் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்படுகின்றனர்: நவாசுதின் சித்திக்

பாலிவுட்டில் நாயகர்கள்தான் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்படுகின்றனர்: நவாசுதின் சித்திக்
Updated on
1 min read

தான் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என்றும், பாலிவுட்டின் ஜனரஞ்சக திரைப்பட நாயகர்கள்தான் அப்படி ஒரு கூண்டில் அடைபட்டிருக்கிறார்கள் என்றும் நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார்.

"ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நமது துறையில் தவறான புரிதல் இருக்கிறது. நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகன் என்று நினைக்கிறேன். பாலிவுட்டில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்படுவது நாயகர்கள்தான். 30-36 வருடங்கள் நாயகர்களாக நடிப்பவர்கள் ஒரே கதாபாத்திரத்தில்தான் நடிக்கின்றனர். ஒரே மாதிரியான பாவனை, தோரணை, உடை, முக பாவனை என எதுவும் மாறவில்லை. ஒரே விஷயத்தைச் செய்பவர்கள்தான் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள்.

எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'மாண்டோ', 'தாக்கரே', 'ராத் அகேலி ஹை', 'சீரியஸ் மென்' என வித்தியாசமான கதாபாத்திரங்களில்தான் நடித்து வருகிறேன். 'ஃபோடோகிராஃபி'ல் நடித்த அதே நேரம் 'கிக்' திரைப்படத்திலும் நடித்தேன். எனவே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு இந்தத் துறை தரும் வாய்ப்பு அற்புதமாக இருக்கிறது. தொடர்ந்து என்னை அப்படித்தான் பார்ப்பீர்கள்.

நான் ஒரு நாயகனாகவில்லை என்பதற்கும் கடவுளுக்கு நன்றி. அதாவது வழக்கமான ஒரு ஜனரஞ்சக திரைப்பட நாயகனாக. அப்படி நடிக்க ஆரம்பித்தால் நான் இந்த வேலையை விட்டுவிடுவேன். ஏனென்றால் எனக்கு ஒரே மாதிரியான விஷயத்தைச் செய்வது பிடிக்காது" என்று நவாசுதின் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in