

நடிகர் இர்ஃபான் கானின் முடிவு சீக்கிரம் வந்துவிட்டதாக அவரது மனைவி சுதபா சிக்தர் பேசியுள்ளார்.
நடைபெற்று வரும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அவரது மனைவி சுதபா மற்றும் மகன் பாபில் கான் ஆகியோர் பங்கேற்றனர். இர்ஃபானைக் கவுரவிக்கும் விதமாக அவர் நடித்த ’பான் சிங் தோமர்’ திரைப்படமும் திரையிடப்பட்டது. இந்தப் படம் இர்ஃபானுக்கு சிறந்த நடிகர் என்கிற தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
திரைப்பட விழாவில் பேசிய சுதபா, "வீட்டை விட்டு வெளியே வந்து இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று எடுத்த முடிவு துணிச்சலானது. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்ல இப்போது ஒரு முடிவு தேவைப்படுகிறது. இந்த விழா எனக்கு அப்படி ஒரு முடிவு.
இன்று இங்கு இர்ஃபானைக் கொண்டாட, எல்லோருடனும் இருப்பது நன்றாக இருக்கிறது. இதை விடச் சிறந்த திரைப்படத்தை விழாக் குழுவால் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் படம் ஓட்டத்தைப் பற்றி, முடிவு எல்லையைப் பற்றிப் பேசுகிறது. இர்ஃபானின் முடிவு எல்லை சீக்கிரம் வந்துவிட்டது. ஆனால், அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
‘தி லன்ச்பாக்ஸ்’, ‘மக்பூல்’, ‘தி நேம்ஸேக்’, ‘இந்தி மீடியம்’ உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றவர் இர்ஃபான் கான். ஒரு வருடமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பிரிட்டனில் சிகிச்சை நடந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இர்ஃபான் இந்தியா திரும்பினார். மார்ச் மாதம் இர்ஃபான் நடிப்பில் கடைசிப் படமான ‘அங்க்ரேஸி மீடியம்’ வெளியானது. ஏப்ரல் 29, 2020 அன்று தனது 53 வயதில், சிகிச்சை பலனின்றி இர்ஃபான் காலமானார்.