

ஹைதராபாத்தில் தனது ரசிகரின் ஆம்புலன்ஸ் சேவையை நடிகர் சோனு சூட் நேற்று தொடங்கி வைத்தார்.
கரோனா ஊரடங்கால் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தவித்தனர். அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக தனது சொந்த செலவில் பேருந்து, ரயில்களை ஏற்பாடு செய்தார் நடிகர் சோனு சூட். அதேபோல, பசியால் வாடிய பலருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி பசி தீர்த்தார். இவ்வாறு பல்வேறு உதவிகளை செய்து மக்களிடையே ‘ரியல் ஹீரோ’ எனும் பெயரை சோனு சூட் பெற்றுள்ளார். இதன் உச்சக்கட்டமாக, தெலங்கானா மாநிலத்தில் அவருக்கு கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு ரசிகர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் புகழ்பெற்ற டேங்க் பண்ட் பகுதியில் அவ்வப்போது, காதல்ஜோடிகள் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் கடன் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளால் இந்த ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களின் சடலங்களை அங்குள்ள ‘சவாலு சிவா’ என்பவர் தனது சொந்த செலவில் ஏரியில் இருந்து மீட்டு, இறுதிச் சடங்குகளை செய்து வருகிறார். இவர், மக்கள் வழங்கிய பணத்தை சிறுகச் சிறுக சேமித்து சடலங்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கினார்.
அதற்கு ‘சோனு சூட் ஆம்புலன்ஸ் சேவை’ என பெயர் சூட்டினார். இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு சோனுசூட்டுக்கு சிவா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த சிறிய விழாவுக்கெல்லாம் சோனு சூட் வரமாட்டார் என நினைத்திருந்த நேரத்தில், நேற்று சோனு சூட் திடீரென நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நடிகர் சோனு சூட்டை காண டேங்க் பண்ட் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.