'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சை: அமேசான் ப்ரைம் தளத்திடம் விளக்கம் கோரிய மத்திய அமைச்சகம்

'தாண்டவ்' வெப் சீரிஸ் சர்ச்சை: அமேசான் ப்ரைம் தளத்திடம் விளக்கம் கோரிய மத்திய அமைச்சகம்
Updated on
1 min read

'தாண்டவ்' வெப் சீரிஸில் இந்துக் கடவுள்களை ஏளனம் செய்ததாக எழுந்துள்ள புகார்களைக் கவனத்தில் எடுத்து அமேசான் ப்ரைம் வீடியோ தளத்திடம், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது.

சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் 'தாண்டவ்', வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. அலி அப்பாஸ் ஸாஃபர் உருவாக்கி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்தத் தொடரை ‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தின் கதாசிரியர் கௌரவ் சொலாங்கி எழுதியுள்ளார்.

முன்னதாக, இந்துக் கடவுள்களைப் பரிகாசம் செய்வதால் தாண்டவ் வெப் சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. மனோஜ் கோடக் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்துக் கடவுள்களை நல்ல முறையில் காட்டக்கூடாது என்ற முயற்சிகள் நடந்து வருவதாக மனோஜ் கோடக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக தாண்டவ் தொடரில் இந்துக் கடவுள்களை ஏளனம் செய்தது குறித்து பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் ஏற்கெனவே புகார் அளித்திருப்பதாகவும் கோடக் கூறியுள்ளார்.

இந்துக்களின் உணர்வுகளையும், இந்துக் கடவுள்களையும் தாண்டவ் தொடரில் வேண்டுமென்றே புண்படுத்தியதாகவும், இதனால் இந்தத் தொடரை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக இதன் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோடக் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் கோடக், டிஜிட்டல் படைப்புகளைக் கண்காணிக்க, ஒழுங்குபடுத்த எந்தச் சட்டமும், அமைப்பும் இல்லை என்றும், இப்படியான ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களில் அதிகப் பாலியல் காட்சிகள், வன்முறை, போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள், கெட்ட வார்த்தைகள், வெறுப்புணர்வு, வக்கிரம் மிகுந்துள்ளதாகவும், சில நேரங்களில் அவை மத உணர்வுகளைப் புண்புடுத்துவதாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவான ராம் கடம் என்பவரும், இந்தத் தொடரில் சிவனை ஏளனம் செய்யும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கோரியுள்ளார். மேலும், இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். இதுகுறித்து அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர்கள் இதுகுறித்து பதில் கூற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் மத்திய அரசு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களையும், மற்ற இணையச் செய்தி ஊடகங்களையும் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்தது. இதனால் டிஜிட்டல் தளத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வர, இருக்கும் விதிகளை மாற்றும் அதிகாரம் அமைச்சகத்துக்குத் தரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in