

தனது கார், மகேஷ் மஞ்சரேகரின் வாகனத்தை இடித்ததால் அவர் தன்னை அறைந்ததாகவும், அசிங்கப்படுத்தியதாகவும் கைலாஷ் சத்புதே என்பவர் புகார் அளித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு, புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலையில், யாவத் கிராமம் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. யாவத் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், மகேஷ் தெரிந்தே செய்த குற்றமாக, பிணையில் விடக்கூடிய வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகர் மகேஷ் மஞ்சரேகர், காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் அடித்து நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் காரில் வந்த கைலாஷும் உடனடியாக பிரேக் அடித்தாலும் வந்த வேகத்துக்கு மகேஷின் காரில் மீது இடித்திருக்கிறார். இதனால் தனது காரை விட்டு வெளியே வந்து மகேஷுக்கும் கைலாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது முற்றி மகேஷ், கைலாஷை அறைந்ததோடு மட்டுமல்லாமல் அசிங்கமாகப் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மகேஷ் மீது கைலாஷ் புகார் பதிவு செய்திருக்கிறார். ‘வாஸ்தவ்’, ‘ஆஸ்தித்வா’ உள்ளிட்ட பல மராத்தியத் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் மகேஷ். தமிழில் 'ஆரம்பம்', 'வேலைக்காரன்', 'சாஹோ' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.