ஷாரூக் கான் செய்த உதவி - நகைச்சுவை நடிகர் ஜானி லீவர் நெகிழ்ச்சி

ஷாரூக் கான் செய்த உதவி - நகைச்சுவை நடிகர் ஜானி லீவர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

பாலிவுட்டில் பிரபலமான நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் ஜானி லீவர். 80களில் தொடங்கி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். சல்மான் கான், ஷாரூக் கான் படங்கள் தொடங்கி தற்போது ‘கூலி நம்பர் ஒன்’ படத்தில் வருண் தவான் வரை பெரும்பாலான பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் இணையதளம் ஒன்றுக்கு ஆன்லைனில் பேட்டி அளித்துள்ளார் ஜானி லீவர். அதில் தனது கடினமான காலத்தில் ஷாரூக் கான் தனக்கு செய்த உதவியை நினைவு கூர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘பாத்ஷா’ படப்பிடிப்பின் போது எனக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த சூழலில் அப்படத்துக்காக நான் ஒரு காமெடி காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது என் தந்தைக்கு ஆபரேஷன் நடைபெற்றிருந்த சமயம். நான் அதற்கான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். ஆனாலும் அந்த காட்சியில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்தேன்.

நான் என்னுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை வேலையில் திணிப்பதில்லை என்பதால் அந்த விஷயத்தை நான் யாரிடம் சொல்லியிருக்க வில்லை. ஆனால் அன்று ஷாரூக் கான் என்னுடைய அறைக்கு வந்தார். என்னுடைய தந்தையின் நிலை குறித்து கேள்விப்பட்டதாகவும், அவர் எப்படி இருக்கிறார் என்றும் என்னிடம் விசாரித்தார். ஆனால் நான் படப்பிடிப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தால் அவரிடம் சரியாக பேசவில்லை.

ஆனால் ஷாரூக் விடாமல் தொடர்ந்து என்னிடம் ஏதேனும் உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கூறுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

இவ்வாறு ஜானி லீவர் கூறினார்.

ஷாரூக் கான் மற்றும் ஜானி லீவர் இணைந்து ‘பாஸிகர்’, ‘கரண் அர்ஜுன்’, ‘கபி குஷி கபி கம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். பல்வேறு பேட்டிகளின் போது ஷாரூக் கான் தனது அபிமான நடிகராக ஜானி லீவரை குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in