

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள புதிய விளம்பரத்துக்கு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக #RanveerIsJoker (ரன்வீர் ஒரு கோமாளி) என்கிற ஹாஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ரன்வீர் சிங் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இது அறிவியல் ஆர்வலரான சுஷாந்தைக் கிண்டல் செய்வது போல அமைந்திருப்பதாக சுஷாந்தின் ரசிகர்கள் கோபப்பட்டு ரன்வீரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். மேலும் ரன்வீர் ஒரு கோமாளி என்கிற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சுஷாந்தின் மரணத்துக்குப் பிறகு அவரைக் கிண்டல் செய்து விளம்பரம் தேடுவதாக ரன்வீரை குற்றம்சாட்டியுள்ளனர். ரன்வீர் ஏற்கனவே சுஷாந்திடமிருந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறித்திருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர். ரன்வீரைக் கோமாளி என்று சொல்வது உண்மையான கோமாளிகளுக்கு அவமானம், கரண் ஜோஹரிடம் நாணயத்தை விற்றவர் எனப் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனையும் இந்த ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. சுஷாந்த் இறந்த பிறகு ஒருவர் உடனடியாக மனநலம் பற்றிப் பேசுகிறார், இன்னொருவர் தனது விளம்பரத்தில் அறிவியல் பேசுகிறார். சுஷாந்த் இறந்த பின்பும் அவரை வைத்து ஆதாயம் தேடுவதா என்று ஒரு பயனர் சாடியுள்ளார்.
இந்நிலையில் குறிப்பிட்ட நிறுவனம், இந்த விளம்பரம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்டதாகவும், இது எந்த நடிகரையும் கேலி செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.