

‘83’ படம் குறித்து தனக்கு ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக்கோப்பை வெற்றிக் கதையைச் சொல்லும் '83', ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. தற்போது இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அணியின் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன், கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய் தற்போது கிறிஸ்துமஸ் வார இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘83’ படம் குறித்து ஆரம்பத்தில் தனக்கு தயக்கம் இருந்ததாக கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயமாக இருந்தது. ரன்வீர் ஒரு சாதாரண நடிகர், ஒரு விளையாட்டு வீரரை நகலெடுக்கும் அளவுக்கு அவருக்கு திறன் இருக்குமா என்று நினைத்தேன். ஆனால் அவரோடு இருந்த போது, இந்தக் கதாபாத்திரத்துக்காக அவர் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார் என்பதைப் பார்த்து வியந்து போனேன்.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை முழுவதும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கிரிக்கெட் மைதானத்திலேயே இருந்தார். நான் பயந்து விட்டேன். அவர் ஒன்றும் 20 வயது இளைஞன் அல்ல. அவருக்கு அடிபட்டு விடக் கூடாது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. அங்கு தான் ஒரு கலைஞன் வெளிப்படுகிறான். என்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
அவர் என்னுடன் ஏழு அல்லது எட்டு நாட்கள் இருந்தார். அந்த நாட்களில் எனக்கு முன்னால் ஒரு கேமராவை வைத்து நான் எப்படிப் பேசுகிறேன், எப்படி நடந்து கொள்கிறேன், எப்படி சாப்பிடுகிறேன் என்பதையெல்லாம் பதிவு செய்து கொண்டார். என்னைப் போலவே அவர் செய்து காட்டியது அற்புதமாக இருந்தது.
முதலில் இப்படத்தைப் பற்றி என்னிடம் கூறப்பட்டபோது நான் மிகவும் தயங்கினேன். எங்கள் வாழ்நாளிலேயே இது போன்ற ஒரு படம் வருகிறது என்றதும் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
எங்களுக்கு இன்னும் அவ்வளவு வயதாகவில்லையே என்று தோன்றியது. ஆனால் ஒட்டுமொத்த அணியினரும் முடிவு செய்தபோது என்னால் மறுக்க இயலவில்லை.
இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார்.