

மறைந்த இயக்குநர் யாஷ் சோப்ராவின் கடைசித் திரைப்படம் 'ஜப் தக் ஹை ஜான்' வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2012 தீபாவளி அன்று இந்தப் படம் வெளியானது.
ஷாரூக்கான், கேத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்று வரை நினைவுகூரப்படுகின்றன.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
"அவ்வளவு உயர்ந்த மனிதருடன் பணியாற்றியது பெரிய கவுரவம். அவரிடம் எல்லாவற்றிலும் குழந்தையைப் போன்ற உற்சாகம் இருந்தது. அதுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது. யாஷ் சோப்ரா போன்ற அனுபவமிக்க ஒருவரிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்ப்போம். ஆனால், அவர் எப்போதுமே அதிகப் புதுமையான சிந்தனைக்கே முக்கியத்துவம் கொடுத்தார். புதிய விஷயங்களைத் தேர்வு செய்யும் அதே நேரம் நம் பாரம்பரியத்துடன் வேரூன்றி இருக்கும் ஒரு தனித்திறன் அவரிடம் இருந்தது.
யாஷ் சோப்ராவுடனும், குல்சாருடனும் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து ரமலான் நோன்பை முடிப்போம். எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்தது 'ஹீர் ஹீர்' என்கிற பாடல்தான். அதில் எனக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அதைக் கேட்ட யாஷ் சோப்ரா, 'எப்படி அவ்வளவு நுணுக்கத்துடன் பஞ்சாபி பாடலை இசையமைத்தீர்கள்?' என்று கேட்டார்.
அதற்கு நான், 'பஞ்சாபி பாடலை இசையமைக்க அந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று இல்லையே. ஏனென்றால் இந்தியாவில் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம். நமது பாரம்பரியஙக்ள் இணைந்துள்ளன. ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். ஒருவரது கலாச்சாரத்தை இன்னொருவர் மதிக்கிறோம். அது ஒரு தாக்கமாக மாறுகிறது' என்று பதில் சொன்னேன்" என்று ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.