

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இதில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் (என்சிபி) இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ராகுல் பிரீத் சிங் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான மும்பை வீடு, அலுவலகம் உட்பட 3 இடங்களில் என்சிபி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, முக்கிய தகவல் அடங்கிய மின்னணு சாதனங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து, மும்பை என்சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக 11-ம் தேதி (நாளை) ஆஜராக வேண்டும் என அர்ஜுனுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியாட்வாலாவின் மும்பை வீட்டில் நேற்று முன்தினம் நடந்த சோதனையின்போது 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பிரோஸ் மனைவி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.