ஆமிர்கான் நடிக்கும் குல்ஷன் குமார் பயோபிக் எப்போது?- பூஷன் குமார் பதில்

ஆமிர்கான் நடிக்கும் குல்ஷன் குமார் பயோபிக் எப்போது?- பூஷன் குமார் பதில்
Updated on
1 min read

மறைந்த பாலிவுட் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான குல்ஷன் குமாரின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்பது குறித்து குல்ஷன் குமாரின் மகன் பூஷன் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

டிசீரிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார். சூப்பர் கேசட்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தொழிலைத் தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்தவர். 1997ஆம் ஆண்டு, டி கம்பெனி என்று சொல்லப்படும் மும்பையின் நிழலுலகக் குற்றவாளிகளால் கொல்லப்பட்டார்.

இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பது பற்றி ஒரு வருடத்துக்கு முன்பே தகவல் வெளியானது. 'மொகல்' என்ற பெயரில் ஆமிர்கான் இதில் குல்ஷன் குமார் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆமிர்கானும் இதை உறுதி செய்தார். ஆனால், அதன் பிறகு படத்தைப் பற்றி அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில் குல்ஷன் குமாரின் மகன் பூஷன் குமார் இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.

"கண்டிப்பாகப் படத்தை எடுக்கிறோம். ஆமிர்கானே அறிவித்துவிட்டாரே. தற்போது கோவிட் நெருக்கடியால் எல்லாம் தாமதமாகியுள்ளன. ஆமிர்கான் 'லால் சிங் சட்டா' திரைப்படத்தை முடித்ததும் எங்கள் படத்தில் நடிப்பார். எங்களுக்கு மிகவும் விசேஷமான படம் இது. அடுத்த வருடம் இரண்டாவது பாதியில் படத்தை ஆரம்பிப்போம் என நினைக்கிறேன். ப்ரீதம் இசையமைக்கிறார்" என்று பூஷன் குமார் கூறியுள்ளார்.

ஆமிர்கான் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் முன்னதாக சுபாஷ் கபூர் இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. சுபாஷ் மீடூ குற்றச்சாட்டில் சிக்கியதால், ஆமிர்கான் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அப்பாவியே என்று தனது நிலைப்பாடை ஆமிர்கான் பின்னர் மாற்றிக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in