பலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தவர்: வல்லபாய் படேல் குறித்துக் கங்கணா புகழாரம்

பலவீனமான மனம் கொண்ட நேருவுக்காகப் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தவர்: வல்லபாய் படேல் குறித்துக் கங்கணா புகழாரம்
Updated on
1 min read

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள நடிகை கங்கணா ரணாவத், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பலவீனமான மனம் கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்தவர் சர்தார் வல்லபாய் படேல். இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிறார்.

அவரது பிறந்த நாளான இன்று (31 அக்டோபர்) அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நடிகை கங்கணா, வழக்கம் போல தனது பாணியில் அதிரடியான சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

"படேலுக்கு மிகவும் உரிய, தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்தியப் பிரதமர் என்கிற பதவியை, காந்தியைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றே தியாகம் செய்தார். காரணம் நேரு நன்றாக ஆங்கிலம் பேசுவதாக காந்தி நினைத்தார். இதனால் படேலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், தேசம் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்டது. எந்தவித வெட்கமுமின்றி நமக்கு உரியதை நாம் மீண்டும் பறித்துக் கொள்ள வேண்டும்.

அவர் (படேல்) தான் இந்தியாவின் உண்மையான இரும்பு மனிதர். நேரு போன்ற பலவீனமான மனம் கொண்டவரை முன்னால் வைத்துக்கொண்டு தான் பின்னால் இந்த தேசத்தை ஆளலாம் என்று காந்திஜி விரும்பியதாக நான் நம்புகிறேன். அது நல்ல திட்டம்தான். ஆனால், காந்தி கொல்லப்பட்ட பிறகு நிலைமை மிக மோசமானது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைய அகண்ட பாரதத்தை எங்களுக்குத் தந்தவர் நீங்கள். ஆனால், உங்கள் பிரதமர் பதவியைத் தியாகம் செய்ததன் மூலம் சிறந்த தலைமை மற்றும் பார்வையை எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உங்கள் முடிவுக்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.

குடியரசு இந்தியாவை உருவாக்க 562 சமஸ்தானங்களை ஒன்றிணைத்தவர் என்கிற பெருமை கொண்டவர் சர்தார் வல்லபாய் படேல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in