தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க முழுவீச்சில் தயாராகும் அனுராக் காஷ்யப்

தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க முழுவீச்சில் தயாராகும் அனுராக் காஷ்யப்
Updated on
1 min read

தன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நடிகை பாயல் கோஷுக்கு எதிராக இயக்குநர் அனுராக் காஷ்யப் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து மகாராஷ்டிர ஆளுநரைச் சந்தித்து தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியிருந்தார். சமீபத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சியில் பாயல் கோஷ் இணைந்தார்.

இதுவரை பாயல் கோஷின் குற்றச்சாட்டுகள் குறித்து அனுராக் காஷ்யப் தரப்பில் பெரிதாக எந்தச் சலசலப்பும் ஏற்படவில்லை. அனுராக்குக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவிகள், உடன் பணிபுரிந்த நடிகைகள் எனப் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.

தற்போது பாயல் கோஷுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கு எவ்வளவு தீவிரமாக, எத்தனை நாட்கள் நடந்தாலும் அதைக் கண்டிப்பாக நடத்துவது என்றும் அனுராக் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க அனுராக் அனைத்து விதமான ஆதாரங்களையும் சேர்த்து வருகிறார்.

மேலும், அனுராக் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், தனது குடும்பத்தினர் எதிர்கொண்டு வரும் மன அழுத்தமே அவருக்குக் கவலை தருவதாகவும் அனுராக் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர் இத்தனை நாட்கள் பேசி வந்த கொள்கைகளுக்கு முரணாக இருக்கும் இந்தக் குற்றச்சாட்டைப் பொய்யென்று நிரூபிக்க வேண்டிய சூழலிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"அனுராக் பெண்களுக்கு ஆதரவான ஒரு பெண்ணியவாதி இயக்குநராக அறியப்படுகிறார். ஒரு பொய்யினால் அவரது நற்பெயர் கெடுவதை அவர் விட முடியாது. நீதி கிடைக்கும் வரை அவர் கண்டிப்பாகப் போராடுவார்" என்று அனுராக்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in