

போதை மருந்து தடுப்புப் பிரிவினர் அழைத்தும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் விசாரணைக்கு வரவில்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் போதை மருந்து சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. தொடர்ந்து போதை மருந்து தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஒன்று வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் பெயர் சம்பந்தப்பட்டிருந்தது. இதனால் போதை மருந்து தடுப்புப் பிரிவினர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பி கடந்த மாதம் விசாரணை மேற்கொண்டனர் .
சமீபத்தில் கரிஷ்மா பிரகாஷின் அபார்ட்மெண்டில் நடந்த சோதனையில் போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி கரிஷ்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் புதன்கிழமை அன்று கரிஷ்மா விசாரணைக்கு வரவில்லை. ஏன் வர முடியவில்லை என்பது குறித்த விளக்கமோ தகவலோ அதிகாரிகளுக்குத் தரவில்லை.
முன்னதாக அவரது வீட்டில் சோதனை நடந்த போதும் கரிஷ்மா அங்கு இல்லை. அவருக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில் தான் சோதனை நடைபெற்றுள்ளது. எனவே தற்போது மேற்கொண்டு இரண்டு நாட்கள் காத்திருந்த பின் கரிஷ்மாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்த வழக்கில் கதை செய்யப்பட்ட போதை மருந்து விற்கும் ஒருவருக்கும் கரிஷ்மாவுடன் பரிச்சயம் இருப்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.