சாவர்க்கரை சிறையில் தள்ளியது போல என்னையும் சிறையில் தள்ளப் பார்க்கின்றனர் - கங்கணா குற்றச்சாட்டு

சாவர்க்கரை சிறையில் தள்ளியது போல என்னையும் சிறையில் தள்ளப் பார்க்கின்றனர் - கங்கணா குற்றச்சாட்டு
Updated on
1 min read

சாவர்க்கர் அவர்களை சிறையில் தள்ளியது போலவே என்னையும் இவர்கள் சிறையில் தள்ள பார்க்கின்றனர் என்று நடிகை கங்கணா குற்றம்சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரனாவத் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே, மும்பையில் உள்ள அவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இது தொடர்பாக, கங்கனாவின் அவசர மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க தடைவிதித்தது. எனினும், தனது பங்களாவின் 40 % இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கணா மனு தாக்கல் செய்தார். இதை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் நடிகை கங்கணாவும் அவரது சகோதரி ரங்கோலியும் மதரீதியான வெறுப்பை தூண்டுவதாக மும்பை காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரிக்குமாறு மும்பை போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கங்கணா மீது மும்பை போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்த எப்ஐஆர் குறித்து கங்கணா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றோர்களை நான் பின்பற்றுகிறேன். இன்று அரசாங்கம் என்னை சிறையில் தள்ள முயற்சிக்கிறது. இது என்னுடைய தேர்வுகள் சரியானவை தான் நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று என்னுடைய தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை நானும் அனுபவிக்க காத்திருக்கிறேன். அவை என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

லட்சுமி பாயின் கோட்டை உடைக்கப் பட்டது போல என்னுடைய வீடும் உடைக்கப்பட்டது. புரட்சி செய்ததற்காக சாவர்க்கர் அவர்களை சிறையில் தள்ளியது போலவே என்னையும் இவர்கள் சிறையில் தள்ள பார்க்கின்றனர். யாரேனும் பாலிவுட் ‘சகிப்பின்மை’ கும்பலிடம் சென்று இந்த சகிப்புத்தன்மையற்ற நாட்டில் அவர்கள் எவ்வளவு வலியை கடந்து வந்தார்கள் என்று யாராவது கேட்க வேண்டும்.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in