

அத்தனை ஓடிடி தளங்களும் ஆபாச இணையதளங்கள் போலத்தான் செயல்படுகின்றன என்று நடிகை கங்கணா ரணவத் சாடியுள்ளார்.
வியாழக்கிழமை அன்று ஈராஸ் நவ் ட்விட்டர் பக்கத்திலிருந்து சல்மான் கான், ரன்வீர் சிங், கேத்ரீனா கைஃப் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய சில மீம்கள் பகிரப்பட்டன. இதில் இரட்டை அர்த்தம் கொண்ட வரிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது இந்த மீம்கள் நீக்கப்பட்டுவிட்டாலும் இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்திருக்கும் நடிகை கங்கணா, இவற்றை சாடிப் பதிவிட்டுள்ளார்.
"ஒரு சமூகம் திரண்டு வந்து திரையரங்கில் பார்க்கும் அனுபவமாக திரைப்படங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் ஒருவர் கண்டுகளிக்க, பாலியல் ரீதியிலான படைப்புகளைத் தருவதை விட மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்குத் தீனி போடுவது கடினம். கலை வடிவம் டிஜிட்டல் மயமாவதில் இருக்கும் பெரிய நெருக்கடி இது. அத்தனை ஸ்ட்ரீமிங் தளங்களும் ஆபாசத் தளங்களே அன்றி வேறெதுவுமில்லை.
ஒருவர் உடனடித் திருப்திக்காக ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு தனியாகப் படம் பார்ப்பது அந்தத் தளங்களின் தவறல்ல. திரைப்படங்கள், ஒட்டுமொத்த குடும்பம், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடன் பார்க்கும் ஒரு சமூக அனுபவமாக இருக்க வேண்டும்.
சமூகமாக சேர்ந்து பார்ப்பது நமது விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் பார்க்கும் ஒரு விஷயத்தை இன்னொருவரும் பார்க்கிறார் எனும்போது, அவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். கவனமாக இருப்போம். நமது மூளைக்கும், உணர்ச்சிகளுக்கும் தரும் விஷயங்களில் தணிக்கை மிக முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சியாகக் கூட இருக்கலாம்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து இன்னும் சிலரும் ஈராஸ்ஸின் ட்விட்டர் பதிவுக்குக் கண்டனம் தெரிவிக்க அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியது. "சார்ந்தோர் அனைவருக்கும், நமது கலாச்சாரங்களை நாங்கள் நேசிக்கிறோம், மதிக்கிறோம். யாருடைய உணர்ச்சிகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, அப்படி எண்ணியதுமில்லை. குறிப்பிட்ட பதிவுகளை நாங்கள் நீக்கிவிட்டோம். யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னைப்புக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி " என்று ஈராஸின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.