பாலிவுட் திரைப்பட வரிசையாகும் அகதா கிறிஸ்டியின் மர்மக் கதைகள்: விஷால் பரத்வாஜ் புது முயற்சி

பாலிவுட் திரைப்பட வரிசையாகும் அகதா கிறிஸ்டியின் மர்மக் கதைகள்: விஷால் பரத்வாஜ் புது முயற்சி
Updated on
1 min read

மர்மக் கதைகள் எழுதி உலகப் புகழ்பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின் நாவல்களை வைத்து பாலிவுட்டில் புதிய திரைப்பட வரிசையை உருவாக்குகிறார் இயக்குநர் விஷால் பரத்வாஜ்.

அகதா கிறிஸ்டியின் மர்மக் கதைகள், மிஸ் மார்பில் மற்றும் ஹெர்குல் போய்ரோட் ஆகிய இரண்டு துப்பறியும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும். ஆனால், விஷால் பரத்வாஜ், அகதா கிறிஸ்டியின் பிரபலமான ஒரு கதையை அடிப்படையாக வைத்து புதிதாக ஒரு துப்பறியும் இணையை அறிமுகப்படுத்த உள்ளார்.

தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த நாவல் முதல் திரைப்படமாக உருவாகிறது என்பது பற்றி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஒத்தெல்லோ, ஹாம்லெட் ஆகிய கதைகளை அடிப்படையாக வைத்துத் திரைப்படங்கள் எடுத்து வெற்றி கண்ட விஷால் இந்தப் புதிய திரைப்பட வரிசையை அகதா கிறிஸ்டி லிமிடெட் நிறுவனத்தோடு சேர்ந்து தயாரிக்கிறார்.

அகதாவின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது கொள்ளுப் பேரன் ஜேம்ஸ் ப்ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்தத் திரைப்படங்களை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாக விஷால் பரத்வாஜ், ஜேம்ஸ் ப்ரிச்சர்ட் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒரு புதிய நாயகி அறிமுகமாகவுள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in