பிரபல பாடகர் குமார் சானுவுக்கு கரோனா தொற்று

பிரபல பாடகர் குமார் சானுவுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

பிரபல பாலிவுட் பாடகர் குமார் சானுவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணிப் பாடகர்களுள் ஒருவர் குமார் சானு. இந்தி, மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சாஜன் என்ற இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் தமிழிலும் கூட சில பாடல்களைப் பாடியுள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குமார் சானு பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் குமார் சானு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. குமார் சானுவின் ஃபேஸ்புக் பக்கத்தில், ''துரதிர்ஷ்டவசமாக சானுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குமார் சானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

குமார் சானு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி அன்று தனது மனைவியின் பிறந்த நாளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தன் குடும்பத்தோடு கொண்டாட குமார் சானு திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தற்போது இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in